சுற்றிலும் பனைவேலி சூழ
தலைசிறந்த ஓவியனொருவன்
தவமிருந்து வரைந்தது போன்ற
அழகிய வீடு எங்கள் வீடு
அம்மாவின் தாத்தா காலத்தில்
அரிதாய்ப் பூத்திருந்த
அந்த ஒற்றைச் சீமெந்து வீடு
வழிவழியாய் வந்த எங்களையும்
வளர்க்கத் தொடங்கியது
தாத்தா காலந்தொட்டு உறவாடி நிலைத்திருந்த
பழைய நினைவுகளை
வீட்டின் எல்லா திசைகளிலும் உலர்த்திப் போட்டிருந்தார் அம்மா
விசுவாச வேலிகளாய் உயர்ந்து நின்று
தாகம் தணித்த
தென்னை பனை மாமரங்கள்
அக்காவின் நட்புக் கூட்டில்
மைனாவும் கிளியும் புறாக்களும்
ஒருசேர நேசம் வளர்த்து
வலம்வந்த வீடு அது
சொதியோடு சம்பல் கலந்த
பிட்டும் இடியப்பமும்
சுவைத்து மகிழ்ந்திருந்த
அந்த வைகாசி இரவின்
எட்டு மணி தந்த அதிர்ச்சியிலிருந்து
இன்னும் நாங்கள் மீளவில்லை
படலையை உடைத்துக் கொண்டு
அத்துமீறி பிரவேசித்த
அந்நிய சீருடைக்காரர்கள்
நாசம் விளைவித்து தரைமட்டமாக்கிப் போனார்கள்
எங்களின் அழகிய வீட்டை
உயிர் பிழைத்து
கடல் கடந்து
முகாம் ஒன்றில் வாழ்ந்த போதிலும்
பழைய உறவின் ஞாபகத்தில்
தகர்ந்துபோன வீட்டைச் சுற்றி
சோகக் குரல் எழுப்பியபடி
மைனாவும் புறாக்களும்
எங்களோடு
கிளியையும் கிளைகளையும்
தேடிக்கொண்டிருப்பதாக
புதிதாக
உயிர் பிழைத்து வருபவர்கள்
சொல்லக் கேட்கிறோம்
***
அருணா சுந்தரராசன்
வளரி இதழ் ஆசிரியர்